டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க உச்ச நீதிமன்றம் வியூகம் ?

465 0


வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை கலைக்க மோடி கும்பல் நேரடி பேச்சுவார்த்தைகள், அவதூறு வேலைகள், ஒடுக்குமுறைகள், ரெய்டுகள் போன்ற பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு எடுபடாததன் காரணமாக தற்போது நீதிமன்றத்தின் வழி விவசாயிகள் போராட்டத்தை துடைத்தெறிய முயற்சி செய்கிறது.

இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம் தற்போது திடீரென பிரச்சனையை தீர்க்க முனைப்புக் காட்டி வருகிறது. அவ்வகையில் சட்டத்தை ரத்து செய்யாமல் தற்காலிக தடை விதித்து, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து பேச்சுவார்த்தை குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது..

பிரச்சனை வேளாண் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்பது…அதில் எத்தகைய திருத்தங்களையும் விவசாயிகள் கோரவில்லை ஆனால், விவசாயிகளை டெல்லியின் சாலைகளிலிருந்து அகற்ற விரும்பும் உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் பேச்சு வார்த்தைக்குழு உறுப்பினர்கள் நால்வருமே, இந்த சட்டத்தை ஆதரித்து நிற்பவர்கள்தான் என்னும் போதே உச்சநீதிமன்றம் ஏன் திடீரென பிரச்சனையை முடிக்க முனைகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இன்னும் விளங்கக் கூறினால்….இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பிரமோத் குமார் ஜோஷி வேளாண் சட்டங்களை ஆதரித்து கட்டுரை எழுதிவருபவர். அவர் ஆதரிக்கக் காரணம், கார்ப்பரேட் வேளாண் வணிகத்தை ஊக்குவிக்கும் சர்வதேச உணவுக் கொள்கை ‌ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனராக பணியாற்றியவர்தான் இந்த ஜோஷி.

அடுத்து ‘ஷேத்காரி ஷன்கதன்’ என்ற அமைப்பின் தலைவரான “அனில் கன்வாத்” விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தது எல்லா பத்திரிக்கைகளிலும் பிரதான முக்கியத்துவமளிக்கப்பட்டு வந்த செய்திதான். அப்படியிருக்க அப்பட்டமாக தெரிந்தே குழுவில் அமர்த்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

பூபேந்திரசிங் மானும் வேளாண் சட்டத்தை திருத்தங்களுடன் ஆதரிப்பவரே..

மற்றொருவர் Ford, Rockefeller, Bill & Melinda gates foundation ஆகியவற்றால் பிரதானமாக நிதியளிக்கப்பட்டு செயல்பட்டு வரும் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சிலில் (ICRIER) பணிபுரிந்து வரும் அஷோக் குலாத்தி. அதேசமயம் இவர் மோடி அரசின் நிதி ஆயோக்கின் கீழ் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் ( TaskForce) உறுப்பினராகவும், வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் குறித்த நிபுணர் குழுவின் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே பாஜக வாஜ்பாயி அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு பயன்தரும் இந்த வேளாண் சட்டங்களை ஆதரித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் மோடி அரசின் பக்தர்தான் இந்த வேளாண் பொருளாதார அறிஞர்.

மோடி அரசின் பாசிச போக்கினால் விவசாயிகள் கொந்தளித்து நிற்கும் நிலையில் உச்சநீதிமன்றமானது சட்டத்திற்கு வெறுமனே தற்காலிக தடைவிதித்தும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரும் சாதனை செய்வது போல் காட்டிக்கொண்டு அப்பட்டமாக
பன்னாட்டு நிதிமூலதனக் கும்பல்களின் நலனிலிருந்து உருவான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அதில் அங்கம் வகிப்பவர்களைக்கொண்டே நடுநிலை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக நம்மை ஏய்க்கிறது.

ஆனால், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தில் தீ வைத்திருக்கிறார்கள் போராடும் விவசாயப் பெருமக்கள். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். மேலும் உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவோடு எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் செவுலில் அறைந்திருக்கிறார்கள்.

இங்கு மோடி அரசு போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில் உச்சநீதிமன்றத்தை அடுத்த ஆயுதமாக பிரயோகிக்கிறது என்பது உண்மை. ஆனால், அதே சமயம் அரசு, நீதிமன்றம் இவற்றோடு மிக நெருக்கமாக பிண்ணிப்பிணைந்து உறவாடுகிறது கார்ப்பரேட்டுகள், நிதி மூலதனக் கும்பல்கள் என்பதுதான் இந்த பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களின் பிண்ணனியில் நாம் இங்கு கவனிக்க வேண்டியது. எப்போதும் விட மோடி அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அரசு அதன் அங்கம் ஆகியவற்றோடு பன்னாட்டு முதலாளி வர்க்கங்களின் பிரிக்க இயலாத உறவை மேலும், மேலும் அப்பட்டமாக நிர்வாணமாக்கி வருகிறது.

-அசதுல்லாஹ்-Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: