நாளை பாரத் பந்த் – தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு !

546 0


மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய பாரத் பந்த்- முழு அடைப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக தவிர அனைத்து எதிர்க் கட்சிகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக டெல்லியை பல லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் டெல்லி புறநகர் பகுதிகள் போராட்டகளமாக காட்சி தருகிறது. கடந்த 11 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனிடையே நாளை நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த் போராட்டத்துக்கு விவசாயிகள் போராட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. நாளைய (பாரத் பந்த்) போராட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த முழு அடைப்பில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் – அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக – அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்! ஆகவே தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, “பாரத் பந்த்”தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அழைப்பு விடுத்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல் அகில இந்திய அளவில் இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., புரட்சிகர சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், ஆர்ஜேடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மொத்தம் 14 எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. ஆனால் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பாரத் பந்த் போராட்டதில் பங்கேற்க போவது இல்லை என கேரளா விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த 8 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மத்திய தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனை ஆதரித்து தமிழகத்தில் உள்ள தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி., எம்எல்எப், டிடிஎஸ்எப், ஏஏஎல்எல்எப் ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்திருக்கிறார். இதனால் தமிழகத்தில் ஆட்டோக்கள் அனைத்தும் நாளை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகில இந்திய அளவிலான 10 வணிகர் சங்கங்கள் நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய தேசிய வணிகர் சங்க காங்கிரஸ், அனைத்திந்திய வணிகர் சங்க காங்கிரஸ், ஹிந்த் மஸ்தூர் சபா, இந்திய வர்த்தக சங்கங்களின் மையம், அனைத்திந்திய ஒருங்கிணைந்த வணிகர் சங்க மையம், வணிகர் சங்க ஒருங்கிணைப்பு மையம், சுய தொழில் மகளிர் சங்கம், அனைத்திந்திய மத்திய வணிகர் சங்கம், தொழிலாளர் வளர்ச்சி கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த வணிகர் சங்க காங்கிரஸ் ஆகியவை நாளைய முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன. இதனால் வர்த்தக நிறுனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும்.

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை ஒன்றில், நாளை பகலில் அனைத்து ஆம்னி பஸ் சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். வங்கி சேவைகளும் நாளை பாதிக்கப்படலாம். நாளைய பாரத் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: