மோடி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தசரா கொண்டாடிய விவசாயிகள்..

721 0


தசரா பண்டிகையை முன்னிட்டு மோடி தான் எங்கள் ராவணன் எனக் கூறி பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உருவ பொம்மைகளை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஆளும் பாஜக மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்த மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன.

இந்த சட்டங்களில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய அம்சங்கள் இருப்பதாக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும்தான் இந்த மசோதாக்களின் மூலம் பயன்பெறுவர் என்றும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தற்போது நவராத்திரி, தசரா பண்டிகைகள் வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் பல அடி உயரத்தில் ராவணன் பொம்மைகள் வைக்கப்பட்டு விழாவின் முடிவில் எரிப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள், அந்த சட்டங்களால் கார்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதை குறிக்கும் வகையில் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்பரேட் நிறுவனத் தலைவர்களின் உருவ பொம்மைகளை பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் எரித்தனர்.

பாரதிய கிஸான் யூனியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஏராளமானோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: