தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்.அப்துல் காதர். அபுதாபி நிதியமைச்சகம் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜீம் (வயது 11). அபுதாபி குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர். இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குர்ஆன் ஓதும் கிராத் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வாரிக் குவித்து வருகிறார். இந்நிலையில், அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை சார்பில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் குர்ஆன் கிராஅத் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. இதில், 8 ~ 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஏ.அஜீம் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.
இதுதவிர, தமிழ்நாடு பீஸ் அகெதமி நடத்திய குர்ஆன் பிழையின்றி ஓதுதல் (tarteel) போட்டியில் முதலிடமும், அபூதாபி மலையாளி சமஜாம் நடத்திய போட்டியில் மூன்றாமிடமும், தனது 3 வது வயதில் துபை எதிசலாத் நடத்திய குர்ஆன் கிராத் போட்டியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும், துபை அல் மனார் சென்டர் நடத்திய போட்டியில் பங்கேற்பு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிழையின்றி ஓதியது, மொழி உச்சரிப்பு, இனிமையான குரல்வளம் ஆகியன சிறப்பிடம் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் தொடர் சாதனை படைத்தது வரும் சிறுவன் அஜீமை, குர்ஆன் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும், வகுப்பில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Your reaction