Tuesday, April 23, 2024

சீமானை எதிர்க்கும் PJ ! முட்டுகொடுக்கிறதா தவ்ஹீத் ஜமாத்தின் முரட்டு கடிதம்?

Share post:

Date:

- Advertisement -

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. குறிப்பாக என்.டி.எஃப் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவரது உரைகள் சமூக வலைதளங்களில் வைரலும் ஆகுகின்றன. இந்த சூழலில் வித்தியாசமான பார்வையில் அறிக்கை ஒன்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ளது. சீமான் விவகாரத்தில் பிற இயக்கங்கள் மௌனமாக இருக்கும் நிலையில், இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.

தற்போது சீமானை நேரடியாக எதிர்க்கும் பி.ஜே., முன்னதாக ததஜா-வில் அசைக்க முடியாத சக்தியாக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தான் அந்த அறிக்கை:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வெறுப்பு பதிவுகள் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

சில முஸ்லிம்களும் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

சீமான் முஸ்லிம்களை மதம் மாற்றுகிறார்.

ஆர்.எஸ்.எஸின் கைக்கூலியாக செயல்படுகிறார்.

இனவாதத்தை முன்னிறுத்துகிறார். எனவே சீமான் கட்சியில் எந்த முஸ்லிமும் இருக்க கூடாது.

இவை தான் சீமானை விமர்சிப்போரின் வாதமாக உள்ளன.

அரசியல் கட்சியை புரிந்து கொள்ளல்…

அரசியல் கட்சியை பற்றி பொதுவான புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு என்று தனித்த கொள்கையும் செயல்திட்டங்களும் இருக்கவே செய்யும்.

தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் தான் அக்கட்சிகள் செயல்படும்.

அந்த கொள்கை நிச்சயம் இஸ்லாத்தின் கொள்கையாக இருக்காது.

முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டும் என்பது எந்த அரசியில் கட்சியின் கொள்கையாகவும் இருக்க அறவே வாய்ப்பு இல்லை.

பல தெய்வ வழிபாடு, சிலை வழிபாடு, தனிநபர் துதிபாடல் போன்றவற்றை தவிர்த்து ஒரு அரசியல் கட்சியையை பார்க்க முடியாது.

வெகுஜன மக்களின் ஆதரவை பெற ஒரு அரசியல் கட்சிக்கு இதுவெல்லாம் அவசியம் என்ற நிலை உள்ளது.

இது எல்லா அரசியல் கட்சிக்கும் பொதுவில் பொருந்தக் கூடியதாக அம்சமாகும்.

கடவுளே இல்லை என்று பகுத்தறிவு? பேசும் அரசியல் கட்சிகளாக இருந்தால் கூட அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு சிலை அமைப்பதும் அதற்கு வழிபாடு செய்வதும் சாதாரண ஒன்றாகி விட்டது.

ஒன்று எதையும் வணங்காதே என்பார்கள். அல்லது எதை வேண்டுமானாலும் வணங்கி கொள் என்பார்கள்.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் எனும் இஸ்லாத்தின் கொள்கையை எந்த கட்சியும் கூறவுமில்லை. அதற்கு சாத்தியமுமில்லை.

முஸ்லிம்களால் நடத்தப்படும் கட்சியில் கூட இஸ்லாத்திற்கு எதிரான பல முழக்கங்களையும் செயல்பாடுகளையும் பட்டியலிட முடியும்.
திமுகவிற்கு வாக்களிப்பது இஸ்லாத்தின் ஆறாவது கடமை? என்று முஸ்லிம் லீக் கூறியது இதற்கு ஓர் உதாரணம்.

இப்படி கொள்கையின் படி அணுகுவதாக இருந்தால் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் ஒரு முஸ்லிம் இருக்க கூடாது என்பதே நிதர்சனம்.

சீமானின் நாம் தமிழர் கட்சி, தமிழர் எனும் மொழி மற்றும் தமிழ் இனவாதத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

இஸ்லாமோ மொழி மற்றும் இன அடிப்படையில் ஏற்ற தாழ்வு கற்பிக்க கூடாது, சிறப்பு பேசக்கூடாது என்கிறது.

இதன்படியும் தற்போது சீமானுக்கு எதிராக பதிவிடப்படுகிறது.

இந்த அளவுகோல் சீமான் கட்சிக்கு மட்டும் உரியதல்ல.

சீமான் மொழிவாதத்தை பேசுகிறார் என்பது உண்மை.

இஸ்லாத்தின் பார்வையில் அது விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளவும் சந்தேகமிலை.

ஆனால் இந்த விமர்சனம் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் என்றில்லாமல் திராவிட கட்சிகளுக்கும் பொருந்தக்கூடியதே.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று மொழிப்பற்றை பிரச்சாரம் செய்து தான் திராவிட கட்சிகள் வளர்ந்தன என்பதை யாரும் மறுக்கவியலாது.

தற்போதும் மொழியை தூக்கி பேசும் பேச்சுகள் அவர்களிடத்தில் உள்ளன.

அது தவிர காலில் விழும் கலாச்சாரம், பிறரை வணங்குதல், தீபமேற்று ஒரு செயலை துவங்கி வைத்தல், மாலை கலாச்சாரம், சமாதி வழிபாடு என இஸ்லாத்திற்கு எதிரான பல செயல்பாடுகள் திராவிட கட்சிகளிலும் இருக்கின்றன.

கடவுளை நம்புவன் முட்டாள், கடவுளை மற மனிதனை நினை என்பது கூட அவர்களது பிரச்சாரங்களில் ஒன்றாக இருந்தது.

இந்த அளவுகோலின் படி பிரச்சாரம் செய்வதாக இருந்தால் நாம் தமிழர் கட்சி என்றில்லாமல் எந்த அரசியல் கட்சியிலும் இருக்க கூடாது என்று பிரச்சாரம் செய்வது தான் நியாயமானதாக இருக்க முடியும். சரியானதாகும்.

குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் அந்த அளவுகோலை பொறுத்துவதில் ஏதோ கோளாறு உள்ளதாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் கொள்கையை சரி கண்டு பயணிக்க கூடிய ஒருவர் அந்த கொள்கையை அறிந்து, சரிகண்டு தான் அரசியல் கட்சியில் சேர்கிறார்கள்.

அரசியல் எனும் பாதையை அவர்கள் தேர்வு செய்து விட்ட பிறகு அதில் தீவிரமாக பயணிக்கும் சிலருக்கு கலப்பு திருமணம் செய்வது கொள்கைக்கு மாற்றமாக செயல்படுவது சாதாரணமாகி விடுகிறது.

இதுவும் எல்லா கட்சியிலும் உள்ளது தான்.

சீமான் கட்சியில் சேர்பவர்கள் மட்டும் மார்க்கத்தோடு பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களிடம் சிந்தனையில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது.

திராவிட கட்சிகளில் இணைந்த சில முஸ்லிம்கள் சுயமரியாதை திருமணம் எனும் முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அந்த திராவிட கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம்களை மதம் மாற்றுகிறார்கள் என்று இது வரை யாரும் சொல்லவில்லை.

இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்பாடுகளை புரிகிறார்கள் என்பதாலேயே முஸ்லிம்களை மதம் மாற்றுகிறார் என்று சொல்லலாம் எனில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அந்த விமர்சனம் பொருந்தக்கூடியதே.

திருமாவளவன் அவர்கள் நடத்தும் கட்சியிலும் சில முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் வெளிப்படையாகவே ஏகத்துவ கொள்கைக்கு எதிராக பேசுகிறார்கள்.

இலங்கை குண்டு வெடிப்பிற்கு கூட முஸ்லிம்கள் காரணம் என அந்த கட்சியை சார்ந்த சில அறிவிலிகள் கூறினர்.

அதனால் திருமாவளவன் முஸ்லிம்களை மதம் மாற்றுகிறார், அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சொல்ல முடியாதல்லவா?

தன்னுடைய ஈமானை பாதுகாக்க மற்ற கட்சிகளிடமிருந்து எப்படி ஒருவர் ஒதுங்கி செல்ல நினைக்கின்றாரோ அது போலவே தான் சீமான் கட்சியும் என ஒருவர் நினைத்தால் சிக்கல் இல்லை.

ஆனால் சீமானை மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரானவராக கட்டமைப்பதில் தேவையற்ற ஒன்றாகும்.

அவர் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பாக அரசியல் செய்பவராக அறியப்படவில்லை.

மாறாக பல நேரங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறவராகவே அவர் காட்சியளிக்கின்றார்.

பாபர் மஸ்ஜித், காஷ்மீர், ஆஸிபா, மாட்டிறைச்சி விவகாரம், பலஸ்தீன முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல பல நேரங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவான குரலை எழுப்பியுள்ளார்.

முஸ்லிம்களின் கடைகளில் பொருள்களை வாங்காதீர்கள் என்று இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை சிலர் செய்த போது அரபு நாடுகளிடமிருந்து ஏன் பெட்ரோல் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

இவற்றில் எல்லாம் சீமான் மட்டும் அல்லாமல் திருமாவளவன், வைகோ, ஸ்டாலின், திருமுருகன் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் என பலரும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

எனவே இப்படியான நபர்களை ஆர்.எஸ்.எஸின் கைக்கூலி என்று பிரச்சாரம் செய்வது ஏற்புடையது அல்ல.

ஒருவர் நீண்ட காலத்திற்கு தன் சுய அடையாளத்தை மறைத்து அரசியல் செய்ய வாய்ப்பு இல்லை

சீமான் மட்டுமின்றி தமிழகத்தில் அரசியல் செய்கிற பலரின் மீதும் இந்த விமர்சனம் உண்டாகிறது.

திருமுருகன் காந்தி, வைகோ உள்ளிட்டோரையும் அவ்வாறு ஆர்.எஸ்.எஸின் கைக்கூலி என்று கூறும் சிலர் உண்டு. நடிகர் கமலையும் அவ்வாறு கூறுவோர் இருக்கிறார்கள்.

ரஜினி தன்னை தூய அரசியல்வாதியாக, திராவிட – பாஜக கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தார். மக்களின் நம்பிக்கையை பெற பாடுபட்டார். ஆனால் சில காலத்திற்கு கூட அவரால் தனது அடையாளத்தை மறைத்து வைத்திருக்க முடியவில்லை.

மண்டையை மறைக்க தெரிந்த அவருக்கு (சங்கி) கொண்டையை மறைக்க முடியவில்லை. எனவே தானொரு அக்மார்க் சங்கி என்பது மக்களிடையே புலப்பட்டது.

தமிழருவி மணியன் என்று ஒருவர்.

தன்னை ஆகச்சிறந்த காந்தியவாதி என்று அழைத்துக் கொண்டு இருந்தார். காந்திய மக்கள் இயக்கம் ஒன்றை நிறுவி அரசியல் செய்து வந்தார்.

ஆனால் அந்த காந்தியையே கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் பாஜக வகையறாக்களோடு கூட்டு வைத்துக் கொண்டு அதற்கு ஆள்பிடிக்கும் தரகு வேலையை பார்த்து வருகிறார். இப்போதும் தன்னை காந்தியவாதி என்றே கூறுகிறார். அவரது காந்திய மக்கள் இயக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

ஏகத்துவ ஜமாஅத் என்ற பெயரை கொண்ட லட்டர் பேடு அமைப்பில் உள்ள ஒருவர்

நபிகளாரின் பாதையில் மோடி ஆட்சி செய்கிறார்? என்று மோடிக்கு வானாளாவிய புகழாரம் சூட்டும் அளவில் ஆர்.எஸ்.எஸிற்கு கூஜா தூக்குவது ஒன்றே அவரது தலையாய பணி. இயக்கத்தின் பெயருக்கு சற்றும் பொருந்தா பணி.

இப்படி கட்சியின் பெயர் என்னவாக இருந்தாலும் அடையாளங்களின் மூலம் தாங்கள் யார்? தாங்கள் பற்றி நிற்கும் வேர்கள் எது? என்பதை எப்படியாவது வெளிப்படுத்தி விடுவார்கள்.

சீமானின் அரசியலில் நமக்கு மாறுபட்ட பார்வை உண்டு.
அவர் தனது தலைவராக கூறிக் கொள்ளும் பிரபாகரன் இலங்கை முஸ்லிம்களை நடத்திய விதம் குறித்து முஸ்லிம்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.

என்றாலும் அவரை ஆர்.எஸ்.எஸின் கைக்கூலியாக சித்தரிப்பதில் ஏற்புடையதாக இல்லை.

சீமான் கட்சியில் மார்க்க விரோத போக்கு உள்ளதால் அவரை ஆர்.எஸ்.ஸின் கைக்கூலி என்பன போன்ற விமர்சனத்தை சரி என்று ஒருவர் வாதிட்டால் மேற்கண்ட அனைவருக்கும் பொருத்துவதில் தயக்கம் காட்ட கூடாது. அதனை சீமானுக்கும் மட்டுமே பொறுத்துவது ஏற்புடையது இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் பல அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவராக தான் பார்க்க வேண்டியது உள்ளது.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோரை ஒதுக்கும் ஏதோ ஒரு நரிக்கும்பலின் தந்திரமும் தங்களை அடையாள படுத்திக் கொள்ள துடிக்கும் சுயநலவாதிகளின் விஷமத்தனமுமே இதில் அடங்கியுள்ளது.

எனவே முஸ்லிம்கள் அதற்கு இரையாகி விடாமல் விழிப்புணர்வுடன் செயல்படுதல் வேண்டும். என தனது நீண்ட அறிக்கையில் தவ்ஹீத் ஜமாஅத் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...