போரும் – கொரோனாவும் : உகாண்டா அதிபரின் உணர்ச்சிகரப் பேச்சு !

979 0


கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் மக்கள் பொழுதுபோக்குக்காக வெளியே சென்று கொண்டிருப்பதும், காவல்துறையினர் அவர்களைத் தடுத்துத் திருப்பி வீட்டுக்கு அனுப்புவதும் வாடிக்கையாக உள்ளது. சமூக இடைவெளியை இவர்களுக்குப் புரிய வைப்பதற்கே அரசுகள் பெறும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

பல நாடுகளிலும் இதே சூழ்நிலை தொடர்ந்து வந்த நிலையில், உகாண்டா மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும், ஊரடங்கின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் அதிபர் ககுடா முசிவேனி (KAGUTA MUSEVENI ) தன் நாட்டு மக்களிடம் கூறிய அறிவுரை ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதில், “போர்க்காலம் வரும் போது யாரும் நம்மை வீட்டுக்குள் அடங்கி இருக்குமாறு கேட்பதில்லை, ஆனால் நாமாகவே வீட்டுக்குள் அடங்கி இருக்கிறோம். குறிப்பாக உங்கள் வீட்டில் ஒரு பாதாள அறை இருந்தால், மீண்டும் நிலைமை சீராகும் வரை அங்கு அடைந்து கொள்கிறோம். போர் சமயங்களில் யாரும் அவர்களது சுதந்திரம் பறி போவது குறித்துப் பேசுவதில்லை, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீங்களாகவே உங்களது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறீர்கள். போர் சமயங்களில் யாரும் பசியுடன் இருப்பது குறித்துக் குறை கூறுவதில்லை, மீண்டும் சாப்பிடுவதற்கு உயிரோடு இருப்போமா என்று உங்கள் பசியைப் பொறுத்துக் கொள்கிறீர்கள்.

போர் சமயங்களில் கடையின் கதவுகளை அடைத்து (அதுவும் உங்களுக்கு நேரம் இருந்தால்) உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறீர்கள். போர் காலத்தைக் கடந்த பின் உங்களது வியாபாரத்தைத் துவக்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறீர்கள் (அதுவும் வெடிகுண்டுகளுக்கு உங்கள் வியாபார இடங்கள் பலியாகாமலிருந்தால்). போர்க்காலங்களில் இன்னொரு நாளை காண்பதற்குக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். போர்க் காலங்களில் உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. மாறாகக் கட்டாயப்படுத்தி குழந்தைகளை ராணுவத்தில் சேர்த்து அவர்களது பள்ளிக்கூடங்கள் பயிற்சிக்கூடங்கள் ஆகி விடக்கூடாதே என்று எண்ணுகிறீர்கள்.

இந்த உலகம் தற்போது ஒரு போரின் சூழ்நிலையில் தான் உள்ளது. குண்டுகளும் துப்பாக்கிகளும் இல்லாத போர். ராணுவ வீரர்கள் அற்ற போர். எல்லைகள் கடந்த போர். ஒப்பந்தங்களை ஒழித்த போர். ராணுவத் தளவாடங்கள் காணாத போர். பாதுகாப்பான இடங்கள் இல்லாத போர்.

இந்தப் போர்ப் படை, கருணை இல்லாதது. இது குழந்தைகள், பெண்கள், புனித இடங்கள் என எதையும் பார்க்காது. எதற்கும் மதிப்பு கொடுக்காது. இந்தப் போர் படைக்கு வெற்றி எதிலும் ஆர்வமில்லை. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் இது விரும்பவில்லை. பூமிக்கு அடியில் இருக்கும் வளமான தாதுகள் குறித்து இந்த போர்ப் படை கவலையும் படுவதில்லை. மத, கலாச்சார, கருத்து வேறுபாட்டில் அதற்குத் துளியும் ஆர்வமில்லை. இனப் பாகுபாட்டில் அதற்கு எந்த இலக்கும் இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத, கொடூரமான, வேகமான படையாக உள்ளது.

அதற்கு ஒரே கொள்கை, மரணம்! மரணத்தை அறுவடை செய்வது! உலகத்தை ஒரு பெரும் மரணப் படுக்கையாக்குவதை அது விரும்புகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல், எந்த வகை கருவிகளும் இல்லாமல், அது உலகின் ஒவ்வொரு நாட்டிலும் முகாமிட்டுள்ளது. அதன் நடவடிக்கைகள் எந்தப் போர் திட்டங்களாலும், சட்டங்களாலும் கண்காணிக்கப் படுவதில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் அதற்கு அதுவே சட்டம்.

அது கொரோனா வைரஸ்! நல்லவேளையாக, அந்தப் படை பலவீனமாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட முடியும். அதற்குத் தேவையானது நமது கூட்டு முயற்சி, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு!

சமூக மற்றும் தனி மனித இடைவெளியைத் தாண்டி அதனால் உயிர் வாழ முடியாது. நீங்கள் அதை எதிர்கொள்ளும் போது தான் அது செழிக்கிறது. அது உங்களால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறது. சமூக மற்றும் தனிமனித இடைவெளியின் முன் அது சரணடைகிறது. தனிமனித சுகாதாரத்தின் முன்னால் அது மண்டியிடுகிறது. உங்களது கைகளை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான முறை நீங்கள் சுத்தம் செய்கிறீர்களோ அத்தனை முறையும் அது உதவி இழந்து நிற்கிறது. அடம்பிடிக்கும் குழந்தைகளைப் போல் உணவு குறித்துக் கவலைப்படும் நேரமல்ல இது. அதிகாரிகள் சொல்லும் வழிமுறைகளைக் கேட்டு அதற்கு உடன்படுவோம். வைரஸ் பாதிப்பைக் குறைப்போம். பொறுமையை கற்றுக் கொள்வோம். இவற்றையெல்லாம் செய்யும் போது குறைவான காலத்திலேயே நமது சுதந்திரத்தையும் நமது தொழிலையும் நமது சமூகத்தையும் மீண்டும் பெறுவோம்.

இந்த அவசர ஊரடங்கு காலத்திலும் நாம் அவசர சேவைகளையும் மற்றவர்களுக்காக அவசர அன்பையும் கொண்டிருப்போம், கடவுள் நம் அனைவரையும் காப்பாற்றட்டும்.” என்று கூறியுள்ளார்.

உகாண்டா அதிபரின் இந்தக் கண்டிப்பும், நம்பிக்கையும், ஊக்கமும் கலந்த வார்த்தைகள் எல்லைகள் தாண்டி உலக மக்களால் பரப்பப்பட்டு வருகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: