பீட்டா அமைப்பின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

2944 0


தமிழக அரசு நிறைவேற்றிய புதிய ஜல்லிக்கட்டுச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா மனு செய்ததையடுத்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் புதிய சட்டத்தில் காளை மாடுகளை  விளையாட்டுப் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்ற தமிழகத்தின் 5 இடங்களில் காளை மாடுகள் கொடூரமாக நடத்தப்பட்டதாகக் காட்சியளிக்கும் வீடியோக்களையும் இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்ட பிற மனுக்களையும் இணைத்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

இந்த மனுமீதான விசாரணை திங்களன்று (6-11-17) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நடைபெற்றது, அதில் இந்த மனு எழுப்பியுள்ள ஆட்சேபணைகளுக்கு தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர், திண்டுக்கல் மாவட்டத்தின் மரவப்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் மாடுகள் மோசமாக நடத்தப்பட்டதான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பீட்ட இணைத்துள்ளது.

இதுவரை உச்ச நீதிமன்றம் தமிழக சட்டப்பேரவை இயற்றிய இந்தச் சட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்து வருகிறது.

பீட்டா மனுவில், “புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற ஆதாரங்கள் காட்டுவதென்னவெனில் தள்ளாடி கீழே விழும் மாடுகளை மீண்டும் வலுக்கட்டாயமாக எழுப்பி நிற்கவைக்கப்படுகின்றன, எந்தவித மருத்துவ உதவியோ மாடுகளுக்கு ஓய்வோ வழங்கப்படவில்லை. மாடுகள் வால்கள் முறுக்கப்பட்டதால் அவை முறிந்துள்ளன. ஆயுதங்களால் தாக்கப்பட்டன. மூக்கணாங்கயிறு மிகவும் இறுக்கமாக இருந்ததால் அவற்றை இழுக்கும் போது ரத்தம் வந்தன. இன்னும் பிற கோடூரமான வழிகளில் மாடுகள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் இத்தகைய துஷ்பிரயோகம் கடுமையான காயங்களை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்துகிறது, சில வேளைகளில் மனித உயிரும் பலியாகிறது.

2017 ஜல்லிக்கட்டுச் சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 5 சுதந்திரங்களை மீறியுள்ளது. பசியிலிருந்து விடுதலை, தாகம் மற்றும் ஊட்டச்சத்தின்மையிலிருந்து விடுதலை, விலங்குகள் அச்சுறுத்தப்படாமை, வலி, காயம், நோய் ஆகியவற்றிலிருந்து விடுதலை, இயல்பான நடத்தையின் வெளிப்பாடு ஆகியவை முக்கியமானவை. இவை உலகச் சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டவை” என்று பீட்டா தன் மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த மனுவுக்கான பதிலை 4 வாரங்களுக்குள் அனுப்ப உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: