குப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா; கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை – மதுரை எம்பி காட்டம் !

1223 0


கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால் இரு நாட்களாக அதை பற்றி எழுத முடியவில்லை. நோயாளிகளைக் கண்டு பயந்து விலகி அவர்களை ஊரைவிட்டு விரட்டி தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய குரூர மனநிலையுள்ள மனிதர்களா என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நேரமிது.

கேரளாவுக்கு கூலி வேலை செய்வதறகாக இளைஞர் முஸ்தபா சென்றிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மதுரை வந்த அவர் முல்லை நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார்.

இரண்டு அல்லது 3 நாட்கள் கழித்து இவர் காய்ச்சல் காரணமாக வீட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரவி விட்டதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் புரளி கிளப்பினர்.

இன்னும் சிலர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸாரும் அவரது வீட்டுக்கு வந்தனர். டாடா ஏஸ் வண்டியில் முஸ்தபாவையும் அவரது தாயையும் அழைத்து சென்றனர். மதுரையில் முல்லை நகரில் கொரோனா பாதித்த நோயாளியை அழைத்து செல்கிறார்கள் என கேலி செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் முஸ்தபாவின் வீடியோ பரவியது. இதையடுத்து முஸ்தபாவும் அவரது தாயும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சோதனை செய்து கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துவிட்டது. இதையடுத்து முஸ்தபா தனது வீட்டுக்குத் திரும்பினார். இதனிடையே முஸ்தபாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ ஊர் முழுவதும் பரவியது. அப்போது வீட்டுக்கு வந்த முஸ்தபாவை கொரோனா பாதித்த அவர் அங்கே இருக்கக் கூடாது என்றும் அவர் இருந்தால் தங்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை இதே பிரச்சினையை மக்கள் கிளம்பினர்.

இதையடுத்து முஸ்தபா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கிடந்தார். தகவலறிந்து போலீஸார் வந்து கூட்டத்தினரை சமாதானப்படுத்தி கலைத்தனர். இதையடுத்து அதிகாலையில் குப்பை லாரியில் முஸ்தபாவை ஏற்றிக் கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் நேற்றுதான் இவருக்கு கொரோனா இல்லை என கூறினோம். மீண்டும் எதற்காக அழைத்து வந்தீர்கள் என கேட்டு மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து மாலை வீட்டுக்கு அனுப்பினர்.

இதையடுத்து தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில் இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் செவ்வாய்க்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரை கொன்றது கொரோனா கிருமி அல்ல. நமது சமூகம். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுமை யாருக்கும இல்லாமல் போய்விட்டது ஏன்.

அங்கிருந்த போலீஸாரும் ஏன் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கவில்லை. விளிம்புநிலை மனிதர்களை எத்தனை கீழ்த்தரமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்தியுள்ளனர். அவருக்கு கொரோனா இல்லாவிட்டாலும் சமூகத்தினர் ஏற்படுத்திய வலியே அவர் உயிர் போக காரணமாயிற்று. கொரோனா நோய் பரவாமல் தடுக்க சமூக விலகல்தான் தேவையோ தவிர சமூக ஒதுக்கல் இல்லை. உன்னுடன் நாங்கள் இருக்கிறோம் என யாரும் முஸ்தபாவிடம் கூறவில்லை.

இது போன்ற சமூக ஒதுக்கலால் எய்ட்ஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் ஏராளமானோர் இறந்தனர். இனி வரக்கூடிய நாள்களில் இப்படியான உதவிகள் நம் குடும்பத்தாருக்கோ சக மனிதருக்கோ நம் அலுவலக நண்பருக்கோ உடனிருக்கும் தோழருக்கோ தேவைப்படலாம். அப்போது தெறித்து ஓடாமல், விலக்காமல் உரிய பாதுகாப்புடன் உடன் நிற்பதும் ஆறுதல் மொழியுடன் உரிய சிகிச்சை அளிக்க உதவுவதும் மட்டுமே நாம் மனித இனம் எனச் சொல்லிக்கொள்வதிற்கு அர்த்தம் சேர்க்கும். கிருமி நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சமூகத்தின் விலக்கல் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு பலமடங்கு அதிகம்.

இந்த நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதுகலை படிக்கின்ற மருத்துவ மாணவர்களையும் எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு நூறு சதவிகித பாதுகாப்பான அனைத்துக் கருவிகளையும் அரசு வழங்கிவிட்டதா? நிச்சயம் இல்லை. விரைவில் வழங்க வேண்டும் என நான் உள்பட பலரும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றோம். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊழியரும் அங்கு இரவுபகலாக பணியாற்றுகின்றனர்.

நமது அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் ஊழியர்களும் கொரோனா வார்டில் பணியாற்ற சுழற்சிமுறையில் அட்டவணைப் போடப்பட்டுள்ளது. ஒருமுறை கொரோனா வார்டில் பணியாற்றினால் 15 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அனைவரும் பணிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சூழலில்தான் அனைவரும் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் மரணம் மதுரையில் நடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முஸ்தபாவின் மரணம் கொரோனாவால் நடந்தது இல்லை. இது தற்கொலையும் அல்ல. கொரோனா பெயரால் சமூகம் நடத்திய கொலை என தனது பதிவில் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: