ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.. உயிருடன் மீட்க ஒட்டுமொத்தமாக களமிறங்கிய தமிழக அரசு !

1254 0


திருச்சி அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணியில் மொத்த தமிழக அரசு இயந்திரமும் களமிறங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் 22 அடி ஆழத்திலுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இன்று மாலை 2 வயது மதிக்கத்தக்க சுஜித் வின்சென்ட் என்ற குழந்தை விழுந்துவிட்டது.

இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கிணற்றுக்குள், ஆக்சிஜனை ட்யூப் மூலம் அனுப்பி அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மருத்துவ மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றின், பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியைத் தோண்டி அதன் வழியாகவும் குழந்தை எடுப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. தகவல் அறிந்ததும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போதிய மருத்துவ வசதிகள் அங்கு இருக்க ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் இருந்து சிறப்பு உபகரணம் கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், மதுரையில்தான் மணிகண்டன் என்பவர் குழந்தைகளை மீட்கும் ரோபோ பாணி கருவியை கண்டுபிடித்துள்ளார். அவர் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆகியோரும் சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் சம்பவ இடத்தில் முகாமிட்டு பணிகளை துரித படுத்தியுள்ளார். இத்தனை துறைகள்தான் என்றில், மேலும் பல அரசுத்துறைகளும், குழந்தையை மீட்பதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், குழந்தையை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். வருவாய் துறையினருக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். இப்போது எங்களது முழு கவனமும் குழந்தையை மீட்பது தொடர்பாக தான் உள்ளது என்றார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபுவும் சம்பவம் குறித்து அறிந்ததும் தனது துறையிலுள்ள அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார். நாராயண பாபு கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள குழந்தையிடம் அதன் பெற்றோர் தைரியம் கொடுத்து ஆறுதல் படுத்தி பேசவேண்டும். பெற்றோரின் குரலைக் கேட்டால், குழந்தை பயப்படாது. அதேபோன்று வெளிச்சத்தை உள்ளே பாய்ச்சியும், குழந்தைக்கு தைரியம் ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த போர்வெல், 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது. குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் இந்த ஆழ்துளை கிணறு, தோண்டப்பட்டதாகவும், அப்போதே மூடப்பட்டு இருந்தாலும், இப்போது மழை காரணமாக போர்வெல் மேல் பகுதி திறந்து இருந்ததால், இந்த குழந்தை அதற்குள் தெரியாமல், விழுந்து இருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: