நாடு மோசமான நிலைக்கு போகிறது… கடிதம் எழுதிவிட்டு பதவியை ராஜினாமா செய்த கலெக்டர் !

1673 0


கடந்த மோடி ஆட்சி காலத்தின் போது, கும்பல் படுகொலைகளை கண்டித்து, சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசுக்கு திருப்பி அளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இப்போது நாடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், உயர் பதவிக்கு சொந்தக்காரர்களான, ஐஏஎஸ் அதிகாரிகளே, இந்த நாட்டின் நிலைமை சரியில்லை என்று கூறி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். டையூ டாமன் யூனியன் பிரதேசத்தின் செயலாளராக இருந்த, ஐஏஎஸ் அதிகாரியான, கண்ணன் கோபிநாதன் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவது என்பதுதான்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. அங்கு பெருமளவுக்கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம்தான் அவர் காரணமாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம், தென் கனரா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் என்ற மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்து அது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளது, பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளன. ”

நமது ஜனநாயகம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஆனால் அந்த கட்டுமானத்தின், அடிப்படை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசங்கள் செய்யப்படும் இந்த கால சூழ்நிலையில், நான் பொதுப் பணியில் இருப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. வருங்காலங்களில் நமது நாட்டின் அடிப்படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக்கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே ஐஏஎஸ் பதவியிலிருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன்.” இப்படி சொல்லியுள்ளார் சசிகாந்த் செந்தில்.

நாட்டின் பன்முகத்தன்மை, உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் சமரசம் செய்யப்படுவதாக கூறியதோடு நிறுத்தாமல், வருங்காலத்தில் பணி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் மோசமாக மாறும் என்று அவர் தெரிவித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாடு, ராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக் கூடிய இந்த நேரத்தில், ஐஏஎஸ் அதிகாரியின் இந்த கருத்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மாறிவிட்டது.

ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது, நடக்கப்போகிறது என்பது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் தெரியக்கூடியது. அதிகாரிகள் என்பவர்கள், உடலில் நாடி நரம்புகள் எவ்வாறு முக்கியமோ அதைப்போல நாட்டுக்கு, முக்கியமானவர்கள். மூளை உத்தரவிடும் செயல்களை நொடிப்பொழுதில் நிறைவேற்றுவது நரம்பு நாளங்கள் தான். அதுபோல, அரசு உத்தரவிட கூடியதை, செயல்படுத்துவது ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்தான். இப்போது அந்த அதிகாரிகள் வட்டமே ஆட்டம் கண்டு இருப்பது, நாட்டின் நாடி நரம்பு நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: