திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு பகல் 12.07 மணியளவில் வந்தது.
அதிரைக்கு வந்த பயணிகள் ரயிலை, ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிரைவாசிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதற்காக பெரியவர்கள் முதல் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் அதிரை ரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். இந்த ரயிலானது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும்.
மேலும் இன்று தொடங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவையில், நாகை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம். செல்வராசு திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வரை ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.
Your reaction