பெரம்பூர் சட்டசபை தொகுதியில், ‘ஜெபமணி ஜனதா கட்சி’ சார்பில் போட்டியிடும், மோகன்ராஜ், 76, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், தன் வேட்பு மனுவில், தன்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது; உலக வங்கியில், நான்கு லட்சம் கோடி ரூபாய், கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு, அவருக்கு, ‘மிளகாய்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மோகன்ராஜ் கூறியதாவது:’2ஜி’ ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததை குறிப்பிடும் வகையில், என்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளேன். தமிழகத்தின் கடன், நான்கு லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதை என் கடனாக ஏற்று, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.ஏற்கனவே, 2009 லோக்சபா தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டபோதும், 2016 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட போதும், இதே போன்ற விபரங்களை தெரிவித்திருந்தேன். வேட்பு மனுவில், தவறான தகவல் குறிப்பிட்டது குறித்து, யாரும் எதுவும் கேட்டதில்லை. நீதிமன்றத்தில், கலெக்டர் பொய் கூறுகிறார். இது தொடர்பாக போட்ட வழக்கையே, நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
Your reaction