நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த வேட்புமனு தாக்கல் மூலம் அமித் ஷாவின் சொத்துக்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 38.81 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.
அமித் ஷாவின் சொத்து விவரம் :
2012 – 11.79 கோடி
2017 – 34.31 கோடி
2019 – 38.81 கோடி
இந்தச் சொத்து மதிப்பு அவர் 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட ஏழு மடங்கு உயர்ந்ததாகும். 2012 ம் ஆண்டு இவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் இவரது மொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பே 11.79 கோடி ரூபாயாக இருந்தது.
அதன் பிறகு 2017 ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா தனது சொத்து மதிப்பாக 34.31 கோடி ரூபாய் எனத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி பார்த்தால் அவரது சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 4.5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அமித் ஷா நேற்று முன்தினம் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மற்றும் அவரின் மனைவியின் வருமானம் மொத்தமாக 2.84 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது வருமானமாக மாநிலங்களவை எம்பி சம்பளம், சொத்துக்களின் மீது வரும் வாடகை மற்றும் விவசாய நிலத்திலிருந்து வரும் தொகை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
Your reaction