பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

1636 0


 ”டேய் ரிஷ்வந்த் .. விட்ருடா வீட்டுக்குப் போயிடறேன்”, “டேய் பிரெண்டுன்னு சொன்னத நம்பி தானேடா வந்தேன்… ஏண்டா என்ன இப்படி பண்ணினே” “அண்ணா அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது.. நானே கழட்டிடறேண்ணா” – மங்கலாக்கப்பட்ட அந்தக்  காணொலியில் முகமும் அடையாளங்களும் மறைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதறல்கள் இதயத்தை கூரிய கத்தியால் பிளந்து போடுகின்றன. நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்தக் காணொளியைக் கண்ட அந்தக் கணத்தில் சுயநினைவே  மறந்தது; கல்வி மறந்து போனது; பார்க்கும் நான் ஒரு ஆண் என்பதும் மறந்து போனது. கண் முன் வந்து சென்றதெல்லாம்  மகள், அம்மா, சகோதரி, பாட்டி உள்ளிட்டோரின் முகங்கள் தான். அந்தக் காணொளியைப் பார்த்த இரவு கெட்ட கனவுகளால் நீண்டது.

சென்ற மாத இறுதியிலேயே பொள்ளாச்சி பாலியல் வல்லுறவுக் குற்றம் செய்தியாக வெளியானது. இளம்பெண் ஒருவரை காதலிப்பதாய் ஏமாற்றி தன் நண்பர்களோடு காரில் ஏற்றிச் சென்றுள்ளான் ரிஷ்வந்த். செல்லும் வழியில் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர். அப்பெண் எதிர்த்துப் போராடவே அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் கூடியுள்ளனர். கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறித்துக் கொண்டு அப்பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டு தப்பியுள்ளது அந்த கும்பல்.

பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார். பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களோடு ரிஷ்வந்தையும் அவனது கூட்டாளிகளையும் பிடித்து அடித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களது செல்போன்களை சோதனையிட்ட போது ஏராளமான பாலியல் வீடியோக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே காவல் துறையில் புகாரளித்து ரிஷ்வந்தையும் அவனது கூட்டாளிகளையும், ஆதாரமாக அவர்களது செல்போன்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையோ சிக்கியவர்களை தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்காததுடன், புகாரளித்த பெண்ணின் அடையாள விவரங்களையும், முகவரியையும் குற்றவாளிகள் தரப்பினரிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து ரிஷ்வந்தின் நண்பனும், அதிமுகவின் அம்மா பேரவையில் பொறுப்பில் இருப்பவனுமான பார் நாகராஜன் ஒரு கும்பலைத் திரட்டிச் சென்று பெண்ணின் அண்ணனைத் தாக்கியுள்ளான்.

இதையடுத்து விவகாரம் மெல்ல மெல்ல பெரிதாகத் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திமுகவினரும் பெண்கள் அமைப்பினரும் தொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து ரிஷ்வந்த் கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் குற்ற கும்பலுக்குள் நடந்த உள்குத்து விவகாரங்கள் இன்னும் வெளியாகவில்லை – எனினும், தலைமறைவாக இருந்த சமயத்தில் இந்த கும்பலில் முக்கியமான புள்ளியான திருநாவுக்கரசு வீடியோ ஒன்றை வெளியிடுகிறான். அதில், இந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் அரசியல் தலைகள் இருப்பதாகவும், அதை வெளியிடுவதால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் சரி எனவும், சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு எதிர்கட்சிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தான்.

அதையடுத்து மேலும் சில நாட்கள் கழித்து மற்றொரு வீடியோவை திருநாவுக்கரசு வெளியிடுகிறான். அதில் இந்த விவகாரத்தில் தம்மேல் எந்தக் குற்றமும் இல்லை எனவும், தான் காவல்துறையிடம் சரணடையப் போவதாகவும் குறிப்பிடுகிறான். சொன்னபடி மறுநாள் சரணடைகிறான்.

செய்தித்தாள்களின் எட்டாம் பக்க கள்ளக்காதல் செய்திகளுக்கு இடையே புதைந்து ஒரு சில வாரங்களில் ஆறிப் போயிருக்க வேண்டிய விவகாரத்தை நக்கீரன் வெளியிட்ட வீடியோ அதன் குரூரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளது. இதே சமயத்தில் விகடன் பத்திரிகையும் இந்த விவகாரங்களின் பின்னணி குறித்து எழுதத் துவங்கியிருந்தது. நக்கீரனின் வீடியோவைத் தொடர்ந்து வலைத்தளமெங்கும் இவ்விவகாரம் தீயாய் பரவத் துவங்கியது.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல் என்றும், கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேல் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் பள்ளி மாணவிகளில் இருந்து வசதியான மருத்துவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என பத்திரிகைகள் எழுதுகின்றன. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கடந்த சில வருடங்களில் மாத்திரம் 8 இளம்பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் தற்கொலை செய்துள்ளனர் எனவும் ஒருபக்கம் செய்திகள் வருகின்றன.

குற்றம் இழைத்தவர்கள் அரசியல் பெரும்புள்ளிகளின் பினாமிகள் எனத் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்துவது உள்ளிட்டு அரசியல் பெரும் புள்ளிகளின் முறைகேடான பல தொழில்களுக்கு இவர்கள் முகங்களாக இருந்துள்ளனர். அரசியல் அதிகார பலம் தம் பின்னே இருக்கும் திமிரில்தான் பெண்களை நர வேட்டை ஆடியுள்ளனர் குற்றவாளிகள்.

பல்வேறு பெரிய தலைகள் எல்லாம் இதில் சம்மந்தபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், இந்த வழக்கை கைது செய்யப்பட்ட நால்வரோடு முடித்து விடாமல் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

இந்த பிரம்மாண்டமான குற்றச் செயலை துரிதமாக விசாரித்து குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்கே ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நாடே கொதித்தெழுந்தது – இங்கே 250 நிர்பயாக்கள். நாம் இதை இப்படியே விட்டு விட முடியாது; விடவும் கூடாது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: