மனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன ! – முதியோர் தினம்

1797 0


உலக முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. ஊருக்கொரு முதியோர் இல்லங்கள் உள்ள இக்கால கட்டத்தில் முதியோர் தினம் தொடர்பான சிறப்புக்கட்டுரையை பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் மூத்தோர் என்று சொன்னவுடன் அநேகருக்கு நினைவுவருவது முதியோர் இல்லங்கள்தான். பெற்றோரையே புறம்தள்ளி, கொடூரமான முறையில் நடத்தப்பட்டு, பின்னாளில் நமக்கும் வயதாகும் என்ற எண்ணமின்றி, இரக்கமற்ற இயந்திர மனிதர்களும் இந்த உலகில்தான் வாழ்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் காக்கப்படாதோர், உறவினர்களால் ஏமாற்றப்பட்டோர் எனப் பெரும்பாலான முதியோர்கள் ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே நிலையங்களிலும் காணப்படுகின்றனர். மூத்தோரிடம் முஷ்டியை முறுக்கியபடி மூர்கத்தனத்தைக் காட்டுவோருக்கு, பாசமோ, உணர்வின் ஈரதன்மையோ ஒரு நாளும் பிரதானமில்லை. அவர்களின் தேவை… பணம், ஆரம்பரம், வறட்டுக் கெளரவம், போலியான அந்தஸ்து இவை மட்டுமே.

பெற்றோர்கள், மிகக்கொடிய வறுமையிலும் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பிள்ளைகளோ, தனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு தாய்-தந்தையை மறந்துவிடுகிறார்கள்.

`நீ ஏன் வீட்டிலேயே இருக்க… எங்கயாவது போய்த் தொலையறது!’, `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற… செத்துத் தொலையவேண்டியதுதானே?’ என்ற குரல்கள் முதியோர்கள் வாழும் வீடுகளில் அனுதினமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம், பெற்ற பிள்ளைகளே பார்த்துக்கொள்ளாத நிலைமையில் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்துக்கொள்ள சில ஈர நெஞ்சங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கின்றன.

சமீப காலமாகவே நம் அதிரையிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் பெற்றோர்களை கைவிடும் நிலை நடந்து வருகிறது. தன் மனைவி குழந்தைகளின் நலனுக்காக காலம் முழுவதும் தன் இளமையை வெளிநாட்டிலேயே தொலைத்த அதிரையர்கள் ஏராளம். எந்த பிள்ளைகளின் நலனுக்காக வெளிநாட்டில் வாழ்க்கை முழுவதும் தொலைத்தனரோ, அதே பிள்ளைகளால் வீட்டைவிட்டு விரட்டப்படுகின்றனர். கண்டிப்பாக இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.

தாய், தந்தையர்கள் முதுமையை அடைந்ததும் அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்தும் வஞ்சகர்களே ! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ! நாளை உங்களுக்கும் முதுமை என்ற ஒன்று உண்டு. இன்று நீங்கள் உங்கள் தாய் தந்தையர்களுக்கு செய்கிறதை, நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு செய்யாது என்பதில் என்ன நிச்சயம் ?

முதியோர் இல்லாத வீடுகள் இருண்ட பாலைவனத்துக்குச் சமம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: