தஞ்சை சாஸ்திரா பல்கலைகழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 28 கட்டிடங்களை அக்டோபர் 3-ம் தேதிக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாஸ்திரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்தப் பல்கலைகழகம் அரசின் சிறைத்துறைக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் இதை எதிர்த்து சாஸ்திரா பல்கலைகழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி உரிய இழப்பீடை பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை பல்கலைக்கழகத்திற்கே வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமமோகனராவ், சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நிலத்திற்கு ஈடாக 10 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு நிலத்தை பல்கலைக்கழகத்திற்கே ஒப்படைக்கலாம் என்று நீதிபதி ராமமோகனராவ் தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான சுப்பிரமணியம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமே ஒப்படைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால், நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு 3-வது நீதிபதியான கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சாஸ்திரா பல்கலைகழகம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்ற நீதிபதி சுப்பிரமணியத்தின் தீர்ப்பை நீதிபதி கார்த்திகேயன் உறுதி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. ஆக்கிரமிப்புக்குள்ளான 58.17 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள 28 கட்டடங்களை வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதிக்குள் இடித்துவிட்டு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலத்தை காலி செய்யாவிட்டால் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு நிலம் கையகப்படுத்தப்படும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
Your reaction