Friday, April 19, 2024

பாஜக தலைவர்களின் அநாகரிகப் பேச்சுக்களும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் சாபக்கேடும் !!

Share post:

Date:

- Advertisement -

கடந்த காலங்களில் கட்சித் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்பர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம்.

ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்தே செயல்பட்டனர்.
அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் – திமுக தலைவர் கருணாநிதி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து பணியாற்றினாலும் அவர்களுக்குள்ளேயான நட்பும் மரியாதையும் இறுதி வரை குறையவில்லை. இதற்கு அடுத்ததாக, முந்தைய காலத்தினைப்போல் இல்லையென்றாலும் கூட, கருணாநிதியும், ஜெயலலிதாவும், கண்ணியத்தையும் வார்த்தை வரம்புகளையும் இறுதிவரை கடைப்பிடித்தனர்.

கட்சிகளின் அஸ்திரம்

மறைந்த ஜெயலலிதா, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போதாகட்டும், தி.மு.க.வை வசைபாடுவதாகட்டும், அதிலேயும் கூட ஒரு அளவுகோலை கடைப்பிடித்தார். அதை போன்று, தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதாவை, அந்த அம்மையார் என்றே அழைத்தார். இத்தகைய அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது அரசியல்வாதிகளின் வாயிலிருந்து உதிர்க்கும் முத்துக்கள் இருக்கின்றனவே…. ஆஹா…. அதுவும் பாஜக தலைவர்களது பேச்சுக்கள் இருக்கிறதே… அப்பப்பா… வடிவேல் பட காமெடியில் ஒரு வசனம் வருமே… அரசியல் நடத்திறியா? அராஜகம் நடத்திறியா?’-ன்னு. அதேதான்.

பாஜகவின் உணர்வு மோதல்

தமிழகத்தில் நல்லமாதிரியாக சென்றுகொண்டிருந்த அரசியல் நாகரீக களம் தற்போது தடம் மாறி பயணித்து கொண்டிருப்பதற்கு மூல காரணம் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளே என்பது 100 சதவீத உண்மை. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு இத்தகைய வன்முறை சம்பவங்களும், அநாகரீக அரசியல் வார்த்தைகளும், இந்தியா முழுவதும் படர ஆரம்பித்துவிட்டது. இது தற்போது தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன், சிலையை உடைப்பேன் என பேசுவதெல்லாம் தங்களின் சுயஇன்பத்துக்காகவா, அல்லது மக்களின் உணர்வுகளை எப்போதும் மோதவிட்டு பார்க்கும் ஈன எண்ணமா? என்றே புரியவில்லை. ஆன்மீகத்துடனும், அறநெறியுடனும் வாழ்கிறோம் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் சொல்லிக்கொள்ளும் பாஜக தலைவர்களின் வார்த்தைகளா இவையெல்லாம் ?

கோபம் கொப்பளிக்கும் கருத்துகள்

இதற்கு தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்ததே, பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிதான். கேலி-கிண்டல் என்ற பாணியில் இவர், வாய்க்குவந்ததையெல்லாம் பேசிவிட்டு, இறுதியில் அது தன் சொந்த கருத்து சொல்லி தப்பித்துவிடுவார். பின்னர் அவரது அடிச்சுவடியை தொடர்ந்து வந்த எச்.ராஜா, தமிழகத்தில் ஒருவரும் அமைதியுடன் இருக்க கூடாது, வன்முறை வெடித்து சிதறி அவனவன் சாக வேண்டும் என்றே ஒவ்வொரு கருத்துக்களையும் நீண்ட காலமாகவே உதிர்த்து வருகிறார். அது ட்விட்டர் பதிவாகட்டும், பேட்டியாகட்டும், அறிக்கையாகட்டும், எதுவானாலும் சரி, எச்.ராஜாவின் பேச்சினை கேட்டால், கோமாவில் இருப்பவனுக்கு கூட சுயநினைவு திரும்பி கோபம் கொப்பளிக்கும் என்றே சொல்லலாம்.

என்ன அருகதை இருக்கிறது ?

இன்று அதையெல்லாம் மீறி திமுக தலைவர் கருணாநிதி குறித்து எச்.ராஜா வெளியிட்டுள்ள ஒரு பதிவு அநாகரீகத்தின் உச்சக்கட்டம். இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் வார்த்தை பிரயோகங்களை இதற்கு முன்பு இந்த அளவுக்கு தமிழகத்தில் எந்த தலைவர்களும் உபயோகித்தது இல்லை. திமுக தலைவர் கருணாநிதி வயதில் மூத்தவர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர். 50 வருட காலமாக திராவிட இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திவருபவர். 5 முறை தமிழகத்தை ஆண்ட முதல்வர், அரசியல் தவிர, கலை, இலக்கியம், கவிதை, சினிமா, நாடகம் என ஆளுமை கொண்டவர். அவரது ஞானம், அரசியல் எதிரிகளால் கூட கூர்ந்து கவனிக்கப்படுபவை.. பழுத்த அரசியல் ஞானியை வயதிலும், அனுபவத்திலும், திறமையிலும், குணத்திலும் குறைந்த ராஜாவுக்கு விமர்சனம் என்ன அருகதை இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே எச்.ராஜா பேசுவதையெல்லாம் கட்சி தலைமை கண்டித்திருந்தால் இன்று இந்த தடித்த வார்த்தை அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்குமா ?

ராஜாவின் கருத்து பாஜகவுடையதே

தேசிய கட்சியின் தலைமையாக எச்.ராஜாவை நியமித்திருப்பதே இதற்குதான் என்பது வேறென்ன சாட்சி? இது அப்பட்டமாக பாரதீய ஜனதாவின் கருத்துதான் என்பது ஆணித்தரமான உண்மை. எச்.ராஜாவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக ஒதுங்கிக் கொண்டால் அதை மனசாட்சியுடையவர்கள் மன்னிக்க மாட்டார்கள். எச்.ராஜாவின் இந்த பேச்சிற்கு மருத்துவரும், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவருமான தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கண்டனம் தெரிவிக்ககூடிய மனமில்லையா ? வருத்தம் என்ன வேண்டிக்கிடக்கிறது ? பகிரங்க கண்டனம் தெரிவித்திருந்தால் தமிழிசையின் படிப்புக்கும், வளர்ப்புக்கும், தகுதிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

ராஜாவின் நாகரீகம் வேறு

எச்.ராஜாவின் மணிவிழாவிற்கு திமுக செயல்தலைவர் பங்கேற்றது அவரது வளர்ப்பு முறை-அவரது அரசியல் நாகரீகம். இதை ஆறறிவு உள்ளவர்கள் நினைத்து பார்ப்பது அவசியம். எதிர்க்கட்சி, எதிர்முகாம் மீது கருத்து மாறுபாடுகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் இருந்தாலும் நாகரீகமான நடவடிக்கைகளில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட அற்றவர்களாகத்தான் இன்றைய தமிழக பாஜக அரசியல்வாதிகளின் நிலை உள்ளது. ஆரோக்கியமான அரசியலுக்கு சகிப்புத்தன்மை என்பது அவசியமான பண்பு. ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் எச்ராஜாவின் ஒவ்வொரு அரசியல் பதிவுகளையும், கருத்துக்களையும் படித்தால் என்ன நினைப்பார்கள்? நாகரீகமற்ற, கண்ணியமற்ற, வன்முறையுடன் கூடிய அரசியலை நாமும் செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வளராதா ? அப்படி வளர்ந்து உருவெடுத்தால் அதற்கு எச்.ராஜா என்ன பதில் சொல்லப்போகிறார் ? எத்தனையோ பேருடைய தரம்தாழ்ந்த வார்த்தை உபயோகம் தங்களது கட்சியின் சரிவுக்கே காரணமாக அமைந்திருக்கிறது என்பதையும் பாஜக தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

வெறுப்பு அரசியல் வேண்டாமே

எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் தனிநபர் வார்த்தை தாக்குதல்களுக்கு கடிவாளம் போடப்பட்டே ஆக வேண்டும். முதலில் தமிழக மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் இத்தகைய அநாகரீக மற்றும் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதுடன், வரம்புமீறும் அரசியலை தமிழகத்தில் மட்டுமாவது அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக, உணர்வுகளை துண்டிவிடும் வார்த்தைகளை படிக்கவோ, கேட்கவோ நேர்ந்தால், பொருட்படுத்தாமல் விட்டு விடுவதே சரியான செயலாக இருக்கும். இறுதியாக, பாஜக தலைவர்களின் தடிமனான வார்த்தை உபயோகங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதாக்காமல் இருக்க வேண்டும், குறிப்பாக, நேரடி விவாதங்களில் இறங்கி, வெறுப்பு அரசியலை அனுமதிக்க கூடாது. விவாதங்களில் எடுத்துரைக்கும் நச்சுக்கருத்துக்கள் பொதுமக்களிடம் செல்லும்படியான வாய்ப்பை ஊடகங்கள் ஏற்படுத்தக் கூடாது.

இது ஜனநாயகத்தின் சாபக்கேடு

இதுபோன்ற அரசியல்வாதிகளை வளர்க்காமல், மீண்டும் ஒரு கண்ணியமான கலாச்சார சூழலுக்குள் நாம் திரும்பி வர விழிப்புடன் இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். அதையும் மீறி வாய்க்கு வந்தவாறு பேசும் பாஜகவின் அரசியல் அநாகரீகம், ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடே தவிர வேறென்ன சொல்வது…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...