Thursday, March 28, 2024

தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை; அப்போ அரசு பேருந்தில் ??

Share post:

Date:

- Advertisement -

சென்னை : பஸ் கட்டண உயர்வால் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், கொடுமைகளையும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் கீழ் இயக்கப்படும் அனைத்து பஸ்களின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தி, தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நேற்று அதிகாலை பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. எந்தவித முன்னெச்சரிக்கை இன்றி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, கூலி தொழிலாளிகள் மற்றும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வழக்கம்போல் ரூ.10 டிக்கெட் எடுத்து சென்ற மக்கள் இன்றைக்கு ரூ.20 அல்லது அதற்கு மேல் பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. நேற்று பஸ்சில் பயணம் செய்ய வந்த கூலி தொழிலாளிகள், கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் நடந்தே சென்றனர். இதேபோல், கல்லூரி மாணவ, மாணவிகளும் நடந்து சென்றனர். பஸ் கட்டண விலை உயர்வு குறித்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், கொடுமைகளையும் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு: அண்ணாநகர் சிந்தாமணியை சேர்ந்த கல்யாண சுந்தரம்(70): நான் மாணவர்களுக்கு இசை கற்று கொடுத்து வருகிறேன். இதற்காக, சிந்தமணியில் இருந்து பட்டினப்பாக்கம் வந்து செல்வேன். மந்தைவெளி வரை முன்பு ரூ.13 டிக்கெட் வசூல் செய்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.25 வாங்குகின்றனர். பட்டினப்பாக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மந்தைவெளியில் இருந்து மற்றொரு பஸ் மாறி செல்ல வேண்டும். கட்டண உயர்வால் மந்தைவெளியில் இருந்து பட்டினப்பாக்கத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும் போலிருக்கிறது. பஸ்சில் ரூ.50 டிக்கெட்டும் தர மறுக்கின்றனர். ஏன் என்று கேட்டால் இல்லை என்று நடத்துனர்கள் கூறுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

கோயம்பேடு எம்எம்டிஏவை சேர்ந்த கார்த்திகா (23): வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். தினமும் எம்எம்டிஏவில் இருந்து மந்தைவெளிக்கு வருவதற்கு 2 பஸ்கள் மாறி வருவேன். அப்போது, ரூ.12 தான் டிக்கெட் கட்டணம் ஆகும். இன்று சேத்துப்பட்டில் இருந்து பஸ் ஏறினேன். ஒரு பஸ்சில் வருவதற்கே ரூ.19 ஆகிவிட்டது. மக்கள் நலனுக்காக தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அரசு பஸ்களிலேயே இப்படி பல மடங்கு கட்டணம் உயர்த்தினால் மக்கள் எங்கு செல்வார்கள். தனியார் பஸ் பல மடங்கு கட்டணம் வசூலித்தால் கட்டணக் கொள்ளை. அப்படியென்றால், அரசு தற்போது உயர்த்தியுள்ளதை என்ன என்று சொல்வது?

மயிலாப்பூரை சேர்ந்த ராஜகுமாரி (20) மற்றும் கல்லூரி மாணவிகள்: நாங்கள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். தினமும் மயிலாப்பூரில் இருந்து மந்தைவெளிக்கு பேருந்தில் பயணம் செய்வோம். முன்பு ரூ.3 கொடுத்து டிக்கெட் வாங்கினோம். ஆனால், தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.6 கேட்கின்றனர். முன்பு கல்லூரி சென்று வர கட்டணமாக ரூ.6 மட்டும் தான் செலுத்தி வந்தோம். தற்போது, ரூ.12 செலுத்த வேண்டும். இதனால், கல்லூரிக்கு தினமும் நடந்து செல்லலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அரசு இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள்: நான், தினமும் பெரம்பூரில் உள்ள எனது மகள் வீட்டில் இருந்து நாலூரில் உள்ள எனது சொந்த ஊருக்கு வேலை நிமித்தமாக சென்று வருகிறேன். இதற்கு முன்பு டிக்கெட் ரூ.15 இருந்த நிலையில் தற்போது ரூ.30 கேட்கிறார்கள். நான் வைத்திருந்தது ரூ.20 தான். எனவே என்னை பாதி வழியில், மாத்தூரில் இறக்கி விட்டுட்டாங்க. இதுபோன்ற கொடுமை, வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை. திமுக ஆட்சியில் ரூ.1, ரூ.2, ரூ.5 என்றுதான் ஏற்றினார்கள். ஆனால், தற்போது இரண்டு மடங்காக ஏற்றிவிட்டதால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

திருப்போரூரை சேர்ந்த முரளி: திருப்போரூரில் இருந்து தாம்பரம் வருவதற்கு ரூ.19 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.39 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒரு நாளுக்கு 350 ரூபாய் சம்பளம் வாங்கும் என்னைப்போன்ற கூலி தொழிலாளிகள் இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
வாங்கும் சம்பளத்தை பஸ் டிக்கெட்டுக்கே பாதி கொடுத்து விட்டால் வீட்டுச் செலவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

திருவான்மியூரை சேர்ந்த அரவிந்த்: நான் தினமும் தொழில் சம்பந்தமாக திருவான்மியூரில் இருந்து தாம்பரம், தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, பாரீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவேன். இதனால் ரூ.50 பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டால் அதை வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். தற்போது அந்த டிக்கெட் ரத்து செய்துள்ளதால், கடும் அவதிப்படுகிறேன்.

பெருங்களத்தூரை சேர்ந்த வசந்தி: நான் தினமும் பூ வியாபாரம் செய்வதற்காக கோயம்பேடு மார்க்கெட் வரை சென்று பூ வாங்கிக்கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். அதன் மூலமாகத்தான் எங்கள் வீட்டில் குடும்பம் நடந்து வருகிறது. இவ்வாறு பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு செல்ல ரூ.9 பஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது அந்த கட்டணத்தில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்.இதுபோன்று நங்கள் தினமும் செலவு செய்தல் பூ வியாபாரத்தில் வரும் பணம் முழுவதும் நாங்கள் டிக்கெட் செலவுக்கே கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். பொதுமக்கள் வயிற்றில் அடித்து இது போன்ற காரியங்களை செய்து வரும் அரசை கண்டிக்கிறோம்.

சோழிங்கநல்லூரை சேர்ந்த பொன்னம்பலம்: தாம்பரத்தில் இருந்து சொந்த ஊரான வேலூருக்கு செல்லுகிறோம். முன்பு இங்கிருந்து வேலூருக்கு செல்வதற்கு ரூ.90 கட்டணம் வசூலித்தனர். தற்போது ரூ.140 வசூலிக்கிறார்கள்.இது மிகவும் அதிகப்படியான கட்டணம். இதுபோன்ற கட்டண உயர்வு நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று அதிக கட்டணம் செலுத்திவிட்டு தரமற்ற அரசு பேருந்துகளில் செல்லுவதற்கு நாங்கள் தனியார் பேருந்துகளிலேயே சென்றுவிடலாம். பெட்ரோல் விலையை நள்ளிரவில் திடீர் என்று அறிவிப்பது போல பஸ் கட்டணத்தையும் திடீரென அரசு அறிவித்திருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் அரசு மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Source: தினகரன் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...